Wednesday 11 May 2011

பாகிஸ்தான் - பயங்கரவாதத்தின் பண்ணை



ரொனால்ட் றேகனின் காலத்தில் வெள்ளை மாளிகையில் ஆப்கான் ஜிஹாத் வடிவமைக்கப்படுகிறது. முஜாஹிதீன்களுடனான அமெரிக்க ஜனாதிபதியின் கலந்துரையாடல்



80களில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ இன் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஹாமித் குல், (இடதுபக்கம்) அப்போதைய சீ.ஐ.ஏ யின் பணிப்பாளர் வில்லியம் வெப்ஸ்ரர் , சீ.ஐ.ஏ யின் நடவடிக்கைளுக்கான உதவிப் பணிப்பாளர் கிளயார் ஜோர்ஜ் ,சீ.ஐ.ஏ இன் பாகிஸ்தான் பெஷாவர் நிலைய முஜாஹிதீன்களுக்கான பயிற்சிக்குப் பொறுப்பான மில்ட் பெயார்டன் ஆகியோர் 1987ம் ஆண்டு பெஷாவரில் எடுத்துக்கொண்ட படம்

"நாயோடு உறங்கியவன் அதன் ஒட்டுண்ணியோடுதான் எழுந்திருக்க வேண்டும்.''

இந்த முதுமொழி பாகிஸ்தானுக்கு சரியாகப் பொருந்துகிறது.

அமெரிக்கா என்ற பயங்கரவாதத்தோடு உறவு வைத்து அதன் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு அதன் தாளத்திற்கு ஆட்டம் போட்ட பாகிஸ்தான் இன்று ஆடிப்போய் நிற்கிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் ரஷ்யாவை விரட்டுவதற்கு பாகிஸ்தானின் பெஷாவரைத்தான் அமெரிக்கா ஆயுதக் களஞ்சியமாக்கியது.

அமெரிக்க சீஐஏயும் அதற்கும் என்றும் துணைபோகின்ற சவுதி உளவு நிறுவனமும், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ யும் மிகவும் திட்டமிட்டு பெஷாவரை இராணுவமயப்படுத்தின.

பாகிஸ்தான் 'அமெரிக்க ஜிஹாதின் ' கேந்திர நிலையமாக பரிணாமம் பெற்றது. உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் முஸ்லிம் இளைஞர்களைக் கொண்டு வந்து குவிக்கும் இடமாக பாகிஸ்தான் உருமாறியது.

அரபு நாட்டு பணம் பெறும் தஃவா இயக்கங்கள், குறிப்பாக பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமி இந்த ஜிஹாதை மக்கள் மயப்படுத்தி ஜிஹாதிற்கு ஆட்களைத் திரட்டுகின்ற புனிதப் பணியினை பொறுப்பேற்றது.

அரபு நாடுகளிலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் இளைஞர்கள் பலிகடாக்களாக பெஷாவருக்கு கொண்டு வரப்பட்டார்கள்.

அமெரிக்கா, சவுதி, பாகிஸ்தான் கூட்டுக் கம்பனியே இந்த ஜிஹாதிய பண்ணைகளை பாகிஸ்தானில் உருவாக்கிட காரணியாய் இருந்தது.

யுதர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் புமிக்கான போரட்டத்தை விட பயங்கரமான பிரசாரத்தை மேற்குலக ஊடகங்கள் ஆப்கான் போராட்டத்திற்கு வழங்கின. இதனால் திட்டமிட்டு பலஸ்தீன் போராட்டம் தனிமைப்படுத்தப் பட்டது.

காஷ்மீரும், ஆப்கானும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஜிஹாதிய போராட்டங்களாக அன்று சீஐஏ யினால் மூளைச்சலவை செய்யப்பட்ட எமது உள்ளுர் மற்றும் வெளிநாட்டு புத்தி ஜீவிகள் பிரசாரம் செய்தார்கள்.

அதோடு நில்லாமல் பாகிஸ்தான் அமெரிக்காவின் இந்த உதவியை தனக்கு எதிரியாய் இருக்கும் இந்தியாவிற்கு எதிராகவும் பயன்படுத்திக் கொண்டது. தன்னிடம் இயக்கங்கள் கொண்டு சேர்க்கும் இளைஞர்களை பெஷாவருக்கும், அஸாத் காஷ்மீருக்கும் ஆயுதப் பயிற்சிக்காக அனுப்பிக் கொண்டிருந்தது.
இந்தக் கூட்டுக் கம்பனியின் உதவியால் லஷ்கர் -இ -தைபா போன்ற இந்திய எதிர்ப்பு இயக்கங்கள் புதுப்பொலிவுடன் வளந்தன.

பாகிஸ்தானின் இருமுனைப் போராட்டமும் சீ.ஐ.ஏ மற்றும் சவுதியின் உதவியால் உரம்பெற்றன. அஸாத் காஷ்மீரில் இந்தியாவோடும், பெஷாவரில் ரஷ்யாவோடும் பாகிஸ்தான் தளம் அமைத்துக்கொண்டு முரசரைந்துக் கொண்டு முன்னே சென்றது.

இன்று இஸ்லாமிய உலகு எதிர்கொள்கின்ற அனைத்து நெறுக்குதல்களுக்கும் அச்சாணியாக இருப்பது இந்த ஆப்கான் போராட்டமும் அதனால் உருவான பின் விளைவும்தான்.

அல் கைதா, தாலிபான்கள் போன்ற அமைப்புகளின் பிறப்பிற்கும் அதன் நடவடிக்கைகளை நசுக்கப் போவதாகக் கூறி அமெரிக்கா தனது வெளிநாட்டு கொள்கையை ஆக்கிரமிப்பாக வடிவமைத்துக்கொளவதற்கும் இது காரணமாக இருந்திருக்கிறது.

ஆப்கானில் ருஷ்யாவை விரட்ட அல்கைதா, தாலிபான்களை வளர்த்து விட்ட பாகிஸ்தான் , ஆப்கானை அமெரிக்கா ஆக்கிரமித்த போது அமெரிக்காவிற்கு சார்பாக இருந்ததை அவதானிக்க முடியும்.

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு பாகிஸ்தான் மிகவும் உறுதுணையாக இருந்து செயற்பட்டு தன்னால் வளர்க்கப்பட்ட அமைப்பபுகளையே காட்டிக்கொடுத்து அழிக்கும் நடவடிக்கைக்கு கைகொடுத்தது.

ஜிஹாத் என்பது ரஷ்யாவோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது. அதே போராட்டம் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பினால் அதன் கருத்து பயங்கரவாதம் என்று திரிபுபடுத்தப்பட்டது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த ஆப்கானில் போராடுவதை ஜிஹாதாக புனிதப் போராக பிரகடனம் செய்த சீ.ஐ.ஏ முல்லாக்கள் கூட ஆப்கானை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது அதற்கெதிராக போராடுவதும் ஜிஹாத் என்று சொல்ல வரவில்லை. ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தனர். இன்று வரை மௌனமாக இருக்கின்றனர்.

இன்று அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஒசாமா விவகாரத்தில் முறுகல் நிலைதோன்றியிருப்பதாக தோற்றப்பாடு உருவாகியிருக்கிறது. இது எந்தளவு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்று பாகிஸ்தான் இறைமை பற்றி பேசுகிறது.

இறைமையுள்ள ஒரு நாடு உலகெங்கிலுமிருந்து முஸ்லிம் இளைஞர்களைக் கொண்டு வந்து தனது நாட்டில் ஆயுதப் பயிற்சி வழங்கி பயங்கரவாதத்தைத் தோற்றுவித்திருக்கிறது. இன்று உலகிலேயே சட்டம், ஒழுங்கு சீர் குலைந்த நாடுகளில் முக்கிய நாடாக திகழ்வது பாகிஸ்தான் தான்.

பாகிஸ்தான் பாதாள உலகம் ஆளுகின்ற ஒரு நாடாக உருவாகியிருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படப்போய் மரணப் பொறியில் இந்த நாடு இன்று மாட்டிக்கொண்டிருக்கிறது.

எந்த தீய சக்திகளின் தேவைக்காக இந்த நாடு கைக்கூலியாக செயற்பட்டதோ அந்த தீய சக்தியின் கரங்களே இன்று அதன் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது.

சுருக்கமாகச் சொல்லப்போனால்
அமெரிக்கா என்ற நாயொடு உறங்கப்போய் பயங்கரவாத ஒட்டுண்ணியோடு எழுந்திருக்கிறது பாகிஸ்தான்.!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...