Tuesday, 27 December 2011

அகன்ற இஸ்ரேலுக்கு அனுசரணை வழங்கும் அல்லாஹ்வின் நேசர்கள்.

இந்தத் தலைப்பு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? இல்லாவிட்டால் ஆத்திரமாக இருக்கிறதா?

இஸ்ரேல் அதன் கொள்கையிலுள்ள 'அகன்ற இஸ்ரேல்' என்று சொல்லக் கூடிய, மக்கா மதீனா புனித ஸ்தலங்களை உள்ளடக்கிய ஓர் அகன்ற இஸ்ரேல் இராஜ்யத்தை மத்திய கிழக்கில் உருவாக்கும் கருத்திட்டத்தை மையமாக வைத்து செயலாற்றி வருகின்றது.


இஸ்ரேலின் விரோதிகளான முஸ்லிம்கள் இதற்கு ஆதரவு அளிப்பதா?
அது நடக்கவே நடக்காது! என்று நீங்கள் என்னோடு சண்டைக்கு வரலாம்.

ஆனால் எங்களையறியாமல் அது நடக்கின்றது. எங்களையறியாமல் நாம் சிலரால் அந்த இலக்கை நோக்கி வழி நடாத்தப்படுகின்றோம்.
அது எப்படி என்பதை சுட்டிக்காட்டுவதே இந்தப் பதிவின் நோக்கம் .

அரசியல்,கட்சி, இயக்கம், ஜமாத்து, பிளவுகள் , பிரிவுகள் என்ற முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்காமல் அதிலிருந்து வெளியே வந்து சுதந்திரமாக சிந்தித்தால் இந்த உண்மையை உங்களால் உணர முடியும்.

ஆப்கானிஸ்தான், ஈராக்... லிபியா அடுத்த படியாக...சிரியா .. ஈரான்..!

அரபுலகின் பூரண ஆதரவோடு , இஸ்லாம் விரோத மேற்குலக அணியான நேட்டோவின் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் லிபியாவின் தலையெழுத்தும் மாற்றப்பட்டு விட்டது.

லிபியாவில் அமெரிக்கப் பிரஜையான, சீஐஏயின் வாரிசான மஹ்மூத் ஜிப்ரீல் லிபியாவின் காப்பாளராக நியமிக்கப்பட்டும் இருக்கின்றார். அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட ஜிப்ரீல் இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இனி ஒருபோதும் இருக்கமாட்டார்.

இனி, இஸ்ரேலின் வாக்களிக்கப்பட்ட 'அகன்ற இஸ்ரேல்' என்ற வாதத்திற்கும், அமெரிக்காவின் எண்ணெய் கொள்ளையிடலுக்கும் அடுத்த தடையாக இருப்பவை சிரியாவும் ஈரானும்தான். இந்த இரண்டு தடைகளையும் தகர்க்க வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருக்கிறது.

நேட்டோவின் அடுத்த இலக்கு சிரியாவையும் ஈரானையும் நோக்கி திரும்பும் என்பதில் சந்தேகமேயில்லை.

இப்போது அந்தக் களத்தையும், தளத்தையும் அமைக்கின்ற பணியில்"இஸ்ரேலிய, அமெரிக்க, அரபு முக்கூட்டு லொபி" (Lobby) கச்சிதமாக இயங்க ஆரம்பித்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான் யுத்தத்தின் போது இந்த முக்கூட்டு லொபி ஜிஹாதை ஜனரஞ்சகப் படுத்தி கம்யூனிஸம் தொடர்பான மிக மோசமான கருத்தாடலை மக்கள் மயப்படுத்தியது.

ஓர் இணைபிரியாத இயங்கு நிலையைக் கொண்ட அமெரிக்க முதலாளியத்திற்கும், அரபு வஹாபிஸத்திற்கும் உள்ள உறவு, இந்த இரு சக்திகளுக்கும் ஊடகங்களில் உள்ள ஆதிக்கம் இக்கருத்தை உலக ரீதியில் மக்கள் மயப்படுத்துவதில் வெற்றியளித்து வருகிறது.

ஜிஹாத் என்ற சொல்லாடலை வெள்ளை மாளிகையின் வெறுப்பிற்கு ஆளானோர் மீது தொடுக்கப்படுகின்ற தூய போராட்டமாக அரபு வஹாபிஸம் அர்த்தப்படுத்தி காட்டி வருகிறது. தேவையான போது மாற்றமான கருத்து பெறும் இந்த ஜிஹாத் சொல்லாடல், அமெரிக்காவிற்கு எதிராக இருந்த லிபியாவிற்கு ஒரு விதமாகவும், அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கும் பஹ்ரைனுக்கு இன்னொரு விதமாகவும் அர்த்தப்படுவதை அவதானிக்க முடியும்.

இன்று நேரடியாக அமெரிக்காவையும், மறைமுகமாக இஸ்ரேலையும் ஆதரிக்கின்ற மத்திய கிழக்கின் வஹாபிய அரபு ராஜாக்களின் அரசியல் தலைமைத்துவங்கள், அடுத்த கட்டமாக சிரியா, ஈரான் இரண்டு நாடுகளுக்கும் எதிராக தனது பிரசார வியூகத்தை இப்போதே ஆரம்பித்திருக்கின்றன.

உலகம் பூராவும் இயங்குகின்ற, அரபுகளின் பெற்றோல் டொலர்களால் உயிர்வாழும், பிற்போக்குவாதிகளால் போஷிக்கப்படுகின்ற இயக்கங்களான தனது "ஏஜன்ட்"களை வைத்து இந்த அரபு அரசியல் தளம் சிரியாவிற்கும், ஈரானுக்கும் எதிராக பிரசார நடவடிக்கைகளை இயங்கு நிலையில் வைத்திருக்கிறது. இது இந்த தீய சக்திகளின் பிரசார யுத்த நடவடிக்கையாகும்.

இராணுவ நடவடிக்கையாக லிபியாவில் கதாபிக்கு எதிராக போர்தொடுத்த அல்காயிதா உறுப்பினர்களையும், ஏனைய பிறநாட்டு ஜிஹாதிய கூலிப்படைகளையும், அமெரிக்க சீ.ஐ.ஏ உளவு நிறுவனம் சிரியாவிற்குள் நகர்த்தி வருவதாக அமெரிக்க எப்.பி.ஐ. உளவு பிரிவில் துருக்கிய மொழி பெயர்ப்பாளராககடமையாற்றிய சீபல் எட்மன்ட் Russia Today (RT) தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கின்றார்.

துருக்கி சிரிய எல்லையில் நேட்டோ படையின் முக்கிய புள்ளிகளால் இவர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அறிய வருகிறது.

தற்போதைய லிபியாவின், திரிப்போலியின் இராணுவ கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் இருக்கும் அல்காயிதாவின் லிபியத் தலைவரான இருந்த ஹாகிம் பில் ஹஜ் தற்போது சிரியாவிற்குள் புகுந்திருப்பதாகவும் ஏனைய அரபு நாடுகளிலிருந்து போராட்டக்காரர்களை சிரியாவிற்கு கொண்டு வரும் வேலையை ஹாகிம் பில் ஹஜ்ஜோடு இணைந்து சீஐஏ திட்டமிட்டு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுவரும் நேட்டோவின் தலைமையிலான இந்த அகன்ற இஸ்ரேலுக்குக்கான அமெரிக்க அக்கிரமிப்பிற்கு அரபு லீக் என்ற பொம்மைக் கூட்டம் அனுசரணை வழங்கியும் வருகிறது.

கடந்த திங்கட் கிழமை டமஸ்கஸ்ஸில் சிரியா விவகாரம் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

அமெரிக்க அனுசரணையில் அரபு லீக் தயாரித்துள்ள இந்நத ஒப்பந்தத்தில் சிரியாவிற்குள் சென்று அரபு லீக் உறுப்பினர்கள் சிரிய நிலைமைகளை அவதானிக்க முடியும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் இடம்பெறுவதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை அவதானிக்கும் பொறுப்பை பெற்றுக் கொள்வதில் அரபு லீக் காட்டும் ஆர்வத்தின் பின்னணியில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலே இருக்கிறது.

கடந்த கால வரலாற்றை கொஞ்சம் மீட்டிப்பாருங்கள்.
அமெரிக்க, இஸ்ரேலிய படைகளால் பலஸ்தீனிலும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மெய் சிலிர்க்கின்ற மனித உரிமை மீறல்கள் நிகழும் போது எவ்வித கரிசனையும் காட்டாத இந்த அமெரிக்க பொம்மைகளான அரபு லீக், சிரிய விவகாரத்தில் மாத்திரம் "சீரியஸாக" சிந்திப்பது சீஐஏயின் வழிகாட்டலில்தான் என்பது தெளிவாக தெரிகின்றது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசியல் நலன் காக்கின்ற உளவாளிகளுக்கு இலகுவாக சிரியாவிற்குள் நுழைகின்ற அனுமதி கிடைத்திருக்கின்றது.

உண்மையை திரிபுபடுத்தும் மேற்குலகின் ஊடகங்களுக்கும் இந்த ஒப்பந்தம் ஒரு வரப்பிரசாதமாகும். இஸ்ரேல், பிரித்தானியா மற்றும் அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் அரபு எண்ணெய் 'ஷெய்க்கு'களின் ஊதுகுழலான அல் ஜஸீராவும் சிரியாவின் மீது நேட்டோ தாக்குதல் ஒன்றிற்கான நியாயத்தை ஏற்படுத்தும் பக்கச்சார்பான செய்திகளை திட்டமிட்டு பரப்பி, உளவியல் ரீதியிலான ஒரு யுத்தத்தை நடாத்தி வருகின்றன.

இஸ்ரேலுக்கு மிகவும் விசுவாசமான, கத்தார் மன்னரின் ஆஸ்த்தான முப்தியான கர்ளாவியும் சிரியாவின் மீது நேட்டோவின் காருண்ய படை கால் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றார்.


ஆனால், சிரியாவின் வன்முறையை முடிவிற்குக் கொண்டு வர அந்நாட்டின் மீது தொடுக்கப்பட தயாராகியிருக்கும் அமெரிக்க ஆதரவிலான படை நடவடிக்கையை ஐநா சபையில் ரஷ்யா கண்டித்திருக்கிறது.

லிபியாவின் பாணியில் சிரியாவை அமெரிக்காவிற்கு தாரை வார்த்துக் கொடுக்கும் இஸ்ரேல் அமெரிக்க நட்பாளர்களான சவூதி, கத்தார், குவைத் அரபு நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஓர்அச்சுறுத்தலாக ரஷ்யாவின் கோரிக்கை அமைந்திருக்கிறது.

ரஷ்யாவின் பிரபல அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் இகோர் பெனரின் Professor Igor Panarin இஸ்ரேல் பிரித்தானிய அமெரிக்க ஆதரவு சக்திகள் சிரியாவின் உள்நாட்டுப் பிரச்சினையில் பெரும் பங்காற்றி வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.அரபு லீக்கிலிருந்த சிரியாவை தள்ளிவைத்தல் தீர்மானம் முற்றாக இஸ்ரேலின் தேவைக் கருதி கொண்டுவரப்பட்ட ஒன்று எனவும் அவர் கூறியிருக்கின்றார்.


இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டின் பாதுகாவலராய் இருக்கும் அமெரிக்க முதலாளியம் தான், சவூதி அரேபிய வஹாபிஸத்தின் பாதுகாவலராய் இருக்கின்றது.


சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்காதான் மத்திய கிழக்கின் இரு பெரும் சக்திகளான சவூதியையும், இஸ்ரேலையும் பாதுகாக்கிறது. எனவே சவூதியால் பணம் வழங்கி பாதுகாக்கப்படுகின்ற ''இஸ்லாமிய வாதி(?)'' களுக்கு இஸ்ரேலைப் பாதுகாக்கின்ற நிர்ப்பந்தங்கள் (மறைமுகமாக) நிறையவே இருக்கின்றன. இதனை யாராலும் மறுக்க முடியாது.
இந்த அடிப்படையில் தான் கர்ளாவியின் பத்வாக்கள் அமெரிக்க முதலாளியத்தினதும் அரபு வஹாபிஸத்தினதும் அரசியல் திருப்திக்கு ஏற்றவாறு வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.


இஸ்ரேலை அமெரிக்கா நேசிக்கிறது. அமெரிக்காவை அரபு நாடுகள் நேசிக்கின்றன. அரபு நாடுகளை இஸ்லாமிய வாதிகள் (?) நேசிக்கின்றார்கள்.
உறவில் இவர்கள் ஓரணியில்தான். இலக்கில் மட்டும் எப்படி வித்திசாப்படுவார்கள்???.


எல்லோரினதும் இலக்கு ஒன்றுதான்.


அதுதான் மத்திய கிழக்கு முழுவதையும் ஒன்றிணைத்த அகன்ற இஸ்ரேல்!
அது அமைய தடையாக இருப்பவர்களை தட்டி வீழ்த்துவது தான் அமெரிக்க ஜிஹாத்!


ஆப்கானிஸ்தான்...ஈராக்...லிபியா விடயத்தில் இஸ்ரேலின் கனவு நனவாகிவிட்டது. இனி சிரியாவும் ஈரானும் தான்.!


எங்கே? இஸ்லாமியவாதிகளே! (?) 80களில் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப் படையை விரட்டி அந்த பூமியை அமெரிக்காவிற்கு பெற்றுக்கொடுக்க அன்று போட்ட அந்த பழைய கோஷங்களை மீண்டும் முழங்குவோமே!
ஸபீலுனா... ஸபீலுனா... அல் (அமெரிக்கா) ஜிஹாத்!
அல் (அமெரிக்கா) ஜிஹாத்!
www.badrkalam.com

Thursday, 19 May 2011

இலங்கையில் படமாக்கப்பட்ட தீபா மேத்தாவின் Water - திரைப்படம்

PrintE-mail

விதவைக் கோலம்! அது அத்தனை கோடூரமானதாக இல்லை இன்றையப் பெண்களுக்கு. மொட்டையடிப்பது, வெள்ளைப் புடவை உடுத்துவது, பூவும், பொட்டும் இழப்பது இதெல்லாம் இன்னமும் வழக்கத்தில் இருந்தாலும், பெரும்பாலும் நகரங்களிலும், படித்தவர்கள் வட்டத்திலும் குறைந்திருக்கிறது.

ஆனால் 50, 60 ஆண்டுகளுக்கு முன்னால் மன ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் பெண்களை சிதைத்துச் சித்திரவதை செய்த கோலம் அது! இதை பல தமிழ்த் திரைப்படங்களில் நான் பார்த்திருந்தாலும், தீபா மேத்தாவின் "Water" என்கிற திரைப்படம் இந்தியாவில் விதவைகளின் அவலங்களை ஒரு மாறுபட்ட கோணத்திலிருந்து பார்க்கவைத்தது. இப்படியும் இருப்பார்களா? என்று என்னை மனம் பதைக்க வைத்தது. கசப்பான, ஆனால் சொல்லப்பட வேண்டிய கதை இது. "Water" என்கிற தலைப்பு திரைப்படத்திற்கு மிகவும் பொருத்தம். தண்ணீரும் இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரம்! எல்லா காட்சிகளிலும் கங்கை ஆற்று நீர் தான் நிரம்பியிருக்கிறது. துக்கம், பாவம், சந்தோஷம் எல்லாவற்றுக்குமே அங்கே தண்ணீர் தான் வடிகால். ஆற்றங்கரை, படிகட்டுகள், சடங்குகள், சன்னியாசிகள், உலரும் துணிகள், வேத ஓதல்கள் என்று வாரணாசியை (RSS, BJP எதிர்ப்புகளால், உண்மையில் படபிடிப்பு இலங்கையில் நடந்தது!)அப்படியே உயிருடன் கண் முன் நிறுத்திருப்பது ஒளிப்பதிவாளரின் திறமையைக் காட்டுகிறது. "விதவைகள் எல்லாவற்றையும் துறந்து புனிதத் தன்மையுடன் இருக்க வேண்டும். புனிதத் தன்மையுடன் இருக்கும் மனைவி சுவர்க்கத்திற்குச் செல்வாள், இல்லையேல் சாத்தானின் கருவில் மீண்டும் பிறப்பாள்" என்று 2000 ஆண்டுகளுக்கு முன் சொன்ன மனு நீதியை இன்னமும் பின்பற்றி, சமூகம், கலாசாரம், கல்வி என்று எல்லாவற்றிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்ட விதவைகளின் நிலையைச் சாடும் ஒரு உணர்ச்சிபூர்வமான திரைப்படம் இது. அறிவு, அறியாமை இரண்டுமே உள்ள ஒரு சமுதாயத்தில், உலகத்திலேயே மிகவும் பழமையான மதமான இந்து மதத்தின் இருண்ட அதிர்ச்சியூட்டும் கோட்பாடுகள் ஏற்படுத்திய பாதிப்பு அருமையாக வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.

ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நேரும் தருவாயை தன் கதையின் பின் புலமாக வைத்து திரைப்படத்தை உருவாக்குவது தீபா மேத்தாவின் தனித்துவம். தன்னுடைய "Earth" படத்தில் இந்தியா - பாக்கிஸ்தான் பிரிவை கதையின் களமாக கையாண்டிருப்பார். "Water" படத்தில் இன்னும் சற்று பின்னோக்கி சென்றிருக்கிறார். 1938 ஆம் ஆண்டு. காந்தியக் கொள்கைகள் மக்கள் மத்தியில் மெல்லப் பரவத் தொடங்கிய காலம் அது.

வாரணாசி! இந்து மதத்தின் பிரதான புன்னிய பூமி! பாவங்களை கங்கையில் கழுவும் இடம்! ஆனால் அங்கே பாவங்களின் மொத்த உருவமாய் விதவைகளின் சரணாலையங்கள்!.

thaaraa

திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில், "சுய்யா" என்கிற 8 வயது சிறுமியிடம் அவளது தந்தை"உன் கணவர் இறந்துவிட்டாரம்மா...இன்றிலிருந்து நீ ஒரு விதவை" என்கிறார். அந்தச் சிறுமி "எத்தனை நாட்களுக்கு அப்பா?" என்று விவரம் புரியாமல் அப்பாவியாகக் கேட்கிறாள். "வாழ் நாள் முழுவதும்" என்கிற பதிலை தன் மகளிடம் சொல்ல முடியாமல் மெளனமாகிறார் தந்தை! இந்தப் படத்தில் வரும் வசனங்கள் மிகக் குறைவு. எல்லாமே இரண்டு மூன்று வரிகள் தான், ஆனால் நெஞ்சில் ஈட்டியாக இறங்கும் வார்த்தைகள்.

சுய்யாவின் தலை மழிக்கப்படுகிறது, வெள்ளைச் சேலை அணிவிக்கப்படுகிறது. விதவைகள் ஆசிரமத்தில் வலுக்கட்டாயமாக ஒப்படைக்கப்படுகிறாள். அந்த ஆசிரமத்தின் மூடிய கதவுகளுக்குப் பின் ஒரு இருண்ட உலகம் விரிகிறது... அங்கே இருப்பவர்களெல்லாம் நடுத்தர வயது மற்றும் முதிய விதவைகள். மழிக்கப்பட்ட தலைகள், வெறித்த பார்வைகள், பசித்த வயிறுகள், வெள்ளைப் புடவை போர்த்திய இளைத்த உடல்கள் - கடவுளைத் தவிர வாழ்க்கையில் மற்ற அனைத்து நம்பிக்கைகளும் அற்றுப் போன ஜீவன்கள். ஒரு வேளைச் சாப்பாடு, விதியை நினைத்து ஆண்டவனிடம் புலம்பல், நிம்மதியற்ற உறக்கம் - இதுவே அவர்களது அன்றாட வாழ்க்கை. இவற்றிற்கு மத்தியில் ஒரு துறுதுறுப்பான 8 வயது சிறுமியை வாழ் நாள் முழுவதும் இருக்கவேண்டுமென்றால் அது எத்தனை பெரிய கொடுமை?. வீட்டுக்குப் போகவேண்டும் என்று அழும் சுய்யாவிடம் ஆசிரமத்தின் தலைவி சொல்கிறாள், "கணவன் இறக்கும் போதே மனைவி பாதி இறந்துவிடுகிறாள். பாதி உயிர் போன ஒரு பெண்ணுக்கு எப்படி வலியும், துயரமும் இருக்க முடியும்?" என்று. "அவளுக்கு மீதி பாதி உயிர் இருக்கிறதே?" என்கிறாள் சுய்யா. தன் வயதிற்கும், உணர்வுக்கும் கொஞ்சமும் சம்மந்தமில்லாத இந்த வாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொள்ளத் தெரியாமல் திண்டாடும் சிறுமிக்கு 'கல்யாணி' என்கிற அழகான இளம் விதவையின் நட்பு கிடைக்கிறது. சகுந்தலா என்ற மற்றொரு நடுத்தர வயது விதவையின் அன்பும் கிடைக்கிறது. அமைதியான, அழுத்தமான, ஆழ்ந்த நம்பிக்கைகளை உடைய விதவை சகுந்தலாவாக வரும் சீமா பிஸ்வாஸின் நடிப்பு அபாரம். கல்யாணி துரதிர்ஷ்டவசமாக அழகாக இருக்கிறாள். அவளுக்கு மட்டும் மழிக்கப்படாத நீண்ட கரிய கூந்தல் இருக்கிறது. இதற்கான காரணம் தெரியவரும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது. அவளது வாழ்க்கையில் சற்று கொடூரம் கூடுதல்! இரவில் அவள் கங்கை ஆற்றைக் கடந்து படகில் அழைத்துச் செல்லப் படுகிறாள் தன் உடலை விற்று அந்த விதவை ஆசிரமத்திற்கு பணம் சம்பாதிக்க! ஆனால் தன் விதியை அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக ஏற்றுக்கொள்கிறாள், கீதையில் "தான் இருக்கும் அழுக்கு நீரில் படாமல் மலர்ந்திருக்கும் தாமரையைப் போல் வாழ வேண்டும்" என்று கிருஷ்ணர் சொல்லியிருப்பதைப் போல.

ஒரு முறை "ஆண்களுக்கான விதவை ஆசிரமம் எங்கே இருக்கிறது?" என்று சுய்யா அப்பாவியாக வினவ, மற்றப் பெண்களெல்லாம் பதைபதைத்து, "அபச்சாரம்! என்ன கேள்வி இது?", "வாயைக் கழுவு" என்று அவளைக் கண்டிக்கிறார்கள். பெண்களின் மூளை எப்படி மதத்தால் சலவை செய்யப்பட்டிருந்தது என்பதை இந்தக் காட்சி எடுத்துக்காட்டுகிறது.

கல்யாணியை சந்திக்க நேரிடும் நாராயண் என்ற இளைஞன், அவளைத் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறான். கல்யாணியைப் பற்றி தன் அம்மாவிடம் அவன் சொன்னதும், அந்தத் தாய் அதிர்ச்சியடைகிறாள். "உன் அப்பா இதை ஒத்துக்கொள்வாரா?" என்று கேட்கிறாள். "அப்பா காந்தியக் கொள்கைகளின் பற்றாளர். நான் ஒரு விதவையைத் திருமணம் செய்துகொள்வதை அப்பா கட்டாயம் வரவேற்பார்" என்று நம்பிக்கையுடன் சொல்கிறான்.

கல்யாணியின் திருமண திட்டத்தைக் கேள்விப்பட்டதும், அவள் விடுதியை விட்டு சென்றுவிட்டால், விடுதிக்கு சம்பாத்தியம் இல்லாமல் போய்விடும் என்று அவளை ஒரு அறையில் அடைத்து வைக்கிறாள் விடுதியின் தலைவி. சகுந்தலா, ஒரு சன்னியாசியிடம்"விதவைகள் துன்புற வேண்டுமென்று நம் வேதத்தில் சொல்லியிருக்கிறதா?" என்று கேட்கிறாள். அந்தச் சன்னியாசி, "விதவைகளுக்காக மூன்று தீர்வுகளை நம் வேதம் சொல்கிறது, ஒன்று - கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறுதல், இரண்டு - கணவர் இறந்தவுடன் துறவியாக வாழ்வது, மூன்று - கணவரின் தம்பியை மணந்துகொள்வது"என்று சொல்கிறார்.

இவை தீர்வுகளா?! அல்ல! இன்னும், மேலும் இழிவான முட்டுக்கட்டைகள்!

தொடர்ந்து அந்தச் சன்னியாசி சகுந்தலாவிடம் "இப்போது புதிய சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் விதவைகளின் மறுவாழ்வுக்காக" என்கிறார். சகுந்தலாவின் கண்களின் நம்பிக்கையும் தீர்க்கமும் தெரிகிறது. ஒரு முடிவுடன் வேகமாக விடுதிக்குச் சென்று, கல்யாணியின் அறைக்கதவை திறந்துவிட்டு "இங்கிருந்து வெளியே செல்!" என்று உத்தரவிடுகிறாள். கல்யாணி தன் காதலனிடம் செல்கிறாள். அவன் அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். படகில் சென்றுகொண்டிருக்கையில், "உன் அப்பாவின் பெயர் என்ன?" என்று கல்யாணி கேட்கிறாள். அவன் சொல்கிறான். சட்டென்று கல்யாணியின் முகம் மாறுகிறது. "படகைத் திருப்பு...நான் திரும்பிப் போகனும்" என்கிறாள். அவள் தன் அப்பாவிடமே படுத்திருக்கிறாள் என்பதை அவன் புரிந்துகொள்கிறான். கல்யாணி விதவை ஆசிரமத்திற்கே திரும்பிச் செல்கிறாள்.

நாராயண் தன் தந்தையிடம் வாதிடுகிறான். "உங்களை எவ்வளவு உயர்வாக நான் எண்ணியிருந்தேன்? நீங்கள் வெளி வேஷக்காரர் தானா?" என்று கேட்கிறான். "அவள் தேவதை அல்ல என்று உனக்குத் தெரிந்துவிட்டது. அவளை உன் ஆசை நாயகியாக வைத்துக்கொள். பிராமணர்கள் எந்தப் பெண்ணுடன் வேண்டுமானாலும் படுத்துக் கொள்ளலாம். அந்தப் பெண் அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று அப்பா சொல்கிறார்.

அன்றிரவு கல்யாணி கங்கை ஆற்றில் மூழ்கி தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறாள். மறு நாள் காலை கல்யாணியை அழைத்துச் செல்ல விடுதிக்கு வரும் நாராயணுக்கு அவளுடைய சாவுச் செய்திதான் கிடைக்கிறது. கல்யாணியின் உடலை கங்கைக் கரையில் தகனம் செய்கையில், "நாங்களெல்லாம் ஏன் இங்கே வந்தோம்? என்ன காரணம்?" என்று சகுந்தலா வேதனையுடன் வினவுகிறாள். நாராயண் சொல்கிறான் "ஒரு வாய் உணவு மிச்சம், நான்கு புடவைகள் மிச்சம், ஒரு படுக்கை மிச்சம், வீட்டில் ஒரு மூலை காலி. மதம் என்கிற வேஷத்தில், பணம் தான் எல்லாவற்றிர்க்கும் காரணம்". எண்ணங்களைப் புரட்டிப்போட்டு சிந்திக்க வைக்கும் பதில் இது! உண்மையில் அந்த விதவைகளின் வாழ்க்கையில் விளையாடியது மதமா? பணமா? கல்யாணியோ, சகுந்தலாவோ ஜமீந்தார் வீட்டுப் பெண்களாக இருந்திருந்தால் இப்படி ஒரு விதவை ஆசிரமத்தில் விட்டிருப்பார்களா? விதவைகள் புனிதமாக, துறவியாக இருக்கவேண்டும் என்று சொல்லுகிறது இந்து மதம், அதற்கு முரண்பாடாக கல்யாணி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறாள். அதற்கு காரணம் மதத்தையும் விஞ்சிய பணம் தானே?

இறுதியில் உச்சக்கட்ட கொடுமை ஒன்று நடக்கிறது அந்த ஆசிரமத்தில். கல்யாணியின் மறைவிற்குப் பின் ஆசிரமத்திற்கு சம்பாத்தியம் நின்றுவிட்டதே?! வேறு இளமையான விதவைகள் அங்கே இல்லை. அதனால் 8 வயது சுய்யா விபச்சாரத்திற்காக கங்கை ஆற்றைக் கடந்து படகில் அழைத்துச் செல்லப்படுகிறாள். "எங்கே போகிறோம்?" என்று கேட்பவளுக்கு "நீ விளையாடுவதற்காக ஒரு இடத்திற்கு" என்று பதில் கிடைக்கிறது. ஒரு மங்கிய ஒளி உள்ள அறையில் சுய்யா விடப்படுகிறாள். படுக்கையில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரைப் பார்த்து சுய்யா "நான் விளையாட வந்திருக்கிறேன்" என்று வெகுளியாகச் சிரித்துக்கொண்டே சொல்லும் போது, மனம் உருகி கண் கலங்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்! அவள் வந்திருக்கும் வீடு நாராயணின் வீடு என்பதும், படுக்கையில் அமர்ந்திருக்கும் நபர் நாராயணின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

துவண்ட மலராக படகில் திரும்பி வரும் சுய்யாவைப் பார்த்து துடிதுடித்துப் போகிறாள் சகுந்தலா. சுய்யாவை அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குச் செல்கிறாள். அங்கே சிறையிலிருந்து வெளியேறி அஹமதாபாதிலிருந்து ரயிலில் செல்லும் காந்திஜி ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் உரையாற்றுகிறார். அவருடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மக்கள் அப்படியே அவருடன் கூட்டம் கூட்டமாக ரயிலேறிச் செல்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் சகுந்தலா, "சுய்யாவை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்! அவளை காந்திஜியிடம் ஒப்படைத்து விடுங்கள்" என்று கதறுகிறாள். அந்தக் கூட்டத்தில் இருக்கும் நாராயணிடம் சுய்யாவை ஒப்படைத்துவிட்டு, மீண்டும் ஆசிரமத்திற்குத் திரும்புகிறாள் சகுந்தலா. கல்யாணி, சுய்யா ஆகியோருக்காக தடைகளை உடைக்கும் மனோபலம் இருந்தும், தன்னுடைய விதிக்குப் பின்னால் ஒரு வலுவான ஆன்மீகக் காரணம் இருக்கிறது என்று ஆழ்ந்து நம்புகிற சகுந்தலா கதாபாத்திரம் இங்கே ஒளிர்கிறது. இத்தோடு திரைப்படம் முடிகிறது. இந்த முடிவில் சோகத்துடன் சற்று நம்பிக்கையும் கலந்திருக்கிறது. இந்தக் கொடுமைகளெல்லாம் மதத்தினாலா அல்லது மதத்தைப் பற்றிய தவறான புரிதலினாலா? என்பது என் கேள்வி.

இந்தத் திரைப்பட இயக்கத்திற்கு ஏற்பட்ட அத்தனை அரசியல் ரீதியான, மத ரீதியான தடைகளை எல்லாம் தாண்டி, போராடி சமூக அவலங்களை படம் பிடித்துக்காட்டிய தீபா மேத்தா, மிகுந்த பாராட்டுக்கு உரியவர்.


http://siragugal.blogspot.com/2006/12/water.html

Tuesday, 17 May 2011

இஸ்லாமிய பயங்கரவாதம் ? கெட்ட நண்பர்களின் கூட்டுச் சதி!இஸ்ரேலின் நண்பன் அமெரிக்கா
அமெரிககாவின் நண்பன் சஊதி அரேபியா
ஆக இஸ்ரேல், அமெரிக்கா, சஊதி அரேபியா மூவரும் கூட்டு நண்பர்கள்.

இதை இப்படியும் சொல்லலாம் அமெரிக்காவிற்கு இரண்டு நட்பு நாடுகள் இருக்கின்றன.

ஒன்று இஸ்ரேல்

மற்றையது சஊதி அரேபியா.

வேடிக்கை என்னவென்றால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கும் இரண்டு நாடுகள்.

ஒரு சிறு பிள்ளையிடம் புதிர் கேள்வியொன்றாய் மேலே நான் சொன்ன நட்பு தொடர்பான தர்க்கத்தை முன்வைத்து இஸ்ரேலுக்கு உள்ள இரண்டு நண்பர்கள் யாவர் என்று கேட்டால் அந்த சின்ன பிள்ளை சஊதியும் அமெரிக்காவும் என்று சற்றென்று பதில் சொல்லும்.


சஊதி அரேபியா இஸ்லாத்தைப் பாதுகாப்பதாக (?) சொல்லிக் கொள்ளும் ஒரு நாடு. இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்காவுடன் அதற்கு இருக்கும் நட்பு மிகவும் நெருக்கமானது. அமெரிக்காவின் தந்திரோபாய “ எண்ணெய் அரசியல்” மத்திய கிழக்கை அதிக்கம் செலுத்துவதற்கு சஊதி பாரிய பங்களிப்பைச் செய்து வருகிறது.

மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை சூறையாடும் அமெரிக்காவின் தந்திரத்திற்கு இருப்பது இரண்டு விதிகள்.

ஒன்று நண்பனாய் நெருங்கி வளங்களை விழுங்குவது

அடுத்தது, விரோதி, பயங்கரவாதி என்ற பெயர்சூட்டி பொருளாதாரத் தடை, போர் என்று கூறி அத்துமீறி அந்தந்த நாடுகளுக்குள் ஆக்கிரமிப்பாளனாய் நுழைந்து அந்த நாட்டின் செல்வங்ளை சூறையாடுவது.

துரதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு நிலைமைகளுக்கும் மத்திய கிழக்கின் அரபு ஆடசியாளர்கள் இரையாகியிருக்கின்றார்கள். சாத்தானோடு இந்த மன்னர்களுக்குள்ள சிநேகம் இவ்வுலகிலே அவர்களுக்கு சுவர்க்கத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இஸ்லாத்திற்கு அழிவை கொடுத்துள்ளது.

கஃபாவின் ஒளியைச் சுமந்த பூமியில் இன்று ஜாஹிலிய்யத் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இஸ்லாத்தின் உயிரோட்டமான கிலாபத் கொச்சைப்பட்டுக்கொண்டிருக்கிறது. அல்குர்ஆன் வேண்டி நிற்கும் ஆட்சிஅங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஷரீஅத் முலாம் பூசப்பட்ட போலி ஆட்சி இஸ்லாத்தின் புனிதத்தை அங்கு புதைத்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா இஸ்ரேலை போஷித்து மத்திய கிழக்கில் அராஜகத்தை வளர்ப்பதபோல். சஊதியை நேசித்து அங்கு ஜாஹிலிய்யத்திற்கு புத்துயிர் அளித்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா, இஸ்ரேல், சஊதி
மூவரும் நண்பர்கள்தான் ஆனால் ஒரு வித்தியாசம்!

இந்த மூவருக்குள்ளேயே வெளிப்படையான நட்பும், உள்ரங்கமான நட்பும் இருக்கிறது. சஊதி அமெரிக்க நற்பு வெளிப்படையானது. அதேபோல் அமெரிக்க இஸ்ரேல் நட்பும்வெளிப்படையானது.

மௌனமாக மறைந்திருக்கும் நட்பு சஊதிக்கும் இஸ்ரேலுக்குமிடையில் இருக்கிறது. அதனால் இஸ்ரேலின் அடாவடித்தனங்களை சஊதி அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. இஸ்ரேலினால் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸைப் பற்றி சஊதி மூச்சு விடுவதுமில்லை.
மாறாக ஆப்கான் மண்ணிலிருந்து ரஷ்யாவை விரட்டி அமெரிக்காவிற்கு அதைப் பெற்றுக்கொடுக்க பெரிய ஜிஹாதையே பிரகடனப்படுத்தி ஆப்கானுக்குள் பணத்தையும் ஆயதத்தையும் அள்ளி வீசியது.

ஆப்கானை மீட்டு அமெரிக்காவிற்கு கொடுக்க முயற்சி செய்த சஊதி, அல்லாஹ்வின் இல்லமான பைத்துல் முகத்தஸை இஸ்ரேலிடமிருந்து மீட்டெடுக்க எந்த ஜிஹாதையும் பிரகடனப்படுத்தவில்லை. பலஸ்தீன் போராளிகளுக்கு எந்த ஆயுதத்தையும் வழங்கவில்லை.
ஆயுதமயமாக்கப்பட்ட ஆப்கானுக்கும், அமெரிக்கா இஸ்லாத்திற்கு எதிராக குற்றம் சாட்டும் “அடிப்படைவாதம்” “பயங்கரவாதம்” என்ற பதப்பிரயோகத்திற்கும் நேரடி தொடர்புள்ளது. ஆப்கான் போராட்டத்திற்கு பிறகே இந்தப் பெயர் இஸ்லாத்திற்கு சூட்டப்பட்டது. ஆப்கானை ரண களமாக்கிய பெருமை சஊதியையும், அமெரிக்காவையுமே சாரும்.

அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஊழியம் புரிந்த சஊதியும், அதன் உளவு நிறுவனங்களினால் வழி நடாத்தப்படும் இஸ்லாமிய இயக்கங்களும் இஸ்லாத்திற்கு ஏற்பட்ட இந்த அவப்பெயருக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.

அமெரிக்காவின் விருப்பத்திற்காக ஆப்கான் யுத்தத்திற்கு உதவிய சஊதி அல்லாஹ்வின் விருப்பத்திற்கு பலஸ்தீனத்திற்கு உதவவில்லை.

அநீதியாளர்களொடு சஊதிக்கு உள்ள நேசமும், முஸ்லிம் என்று அது போடும் வேஷமும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

சஊதிக்கும், அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உள்ள நேரடி, மறைமுக உறவுகளை இப்போது முஸ்லிம்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.

சரி, இவர்கள் ஒவ்வொருவரும் தமக்கிடையே உள்ள இந்த நட்பை எப்படி பாதுகாத்துக்கொள்கிறார்கள்?

இவர்களின் நட்பிற்கான இலக்கணம் என்ன? அதை இப்போது பார்ப்போம்.

இஸ்ரேலின் அனைத்து ஆக்கிரமி்புகளையும், படுகொலைகளையும், அக்கிரமங்களையும், அநியாயங்களையும் ஆமோதித்து அமெரிக்கா அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ.நா பாதுகாப்பு மன்றில்தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துகிறது. இஸ்ரேலை பாதுகாக்கிறது. சட்ட விரோத இஸ்ரேல் நாட்டுக்கு பக்கபலமாய் நின்று உதவி செய்கிறது. சட்ட விரோத இஸ்ரேல் நாட்டுக்கு சண்டித்தனம் செய்ய சான்றிதழ் வழங்குகிறது.


இதுவே அமெரிக்க இஸ்ரேல் நட்பிற்கு நற்சான்று!

இனி இந்த அமெரிக்க இஸ்ரேல் சஊதி முக்கூட்டு நட்பிற்கு சஊதியின் சான்று என்ன என்று நீங்கள் சிந்திக்கலாம்.

அமெரிக்கா, இஸ்ரேலை அரவணைக்கறது. அதன் அட்டகாசத்தை அடக்கி வாசிக்கிறது?

சஊதி அரேபியாவோ-
அமெரிக்கா இஸ்ரேல் அகிய இரண்டு நாடுகளின் அக்கிரமங்களையும் அட்டகாசங்களையும் அடக்கி வாசிக்கிறது . இரண்டு நண்பர்களின் ஈனச்செயல்களையும் அமைதியாக நின்று ஆமோதிக்கிறது.

நன்றி : www.badrkalam.com

இலங்கையில் சல்மான் ருஷ்தியின் கதை !

ஸல்மான் ருஷ்தி எழுதிய 'Midnight's Children' என்ற நாவல் தற்போது இலங்கையின் கொழும்பு நகரில் படமாக்கப்படுகிறது.

கொழும்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, புதுக்கடை போன்ற பகுதிகளில் மேற்படி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் வாழைத்தோட்டம் மஸ்ஜிதுந் நஜ்மி பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள ஒழுங்கை டில்லி நகரின் சனநெருசல் உள்ள ஓர் ஒழுங்கையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

மிகவும் பிரமாண்டமான முறையில் காட்சிகள் படமாக்கப்பட்டன.

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் ஸல்மான் ருஷ்தி, நபி (ஸல்) அவர்கள் பற்றி அவதூறாக பல நூல்களை எழுதியதால் முஸ்லிம்களின் கடுங்கோபத்திற்கு இலக்கானவர்.
அவரின் நாவல் ஒன்றுதான் இலங்கையில் தற்போது படமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

Winds of Change என்ற பெயரில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை இந்தியாவில் பிறந்து கனடாவில் வசித்து வரும் பிரபல தயாரிப்பாளரான தீபா மேத்தா தயாரிக்கின்றார்.

இவர் தயாரித்த Water என்ற திரைப்படம் இந்தியாவில் படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட எதிர்ப்பலையினால் இடைநிறுத்தப்பட்டு, பின்னர் இலங்கையில் படமாக்கப்பட்டது.

1990களில் சல்மான் ருஸ்தியின் 'Midnight's Children' என்ற இந்தக் கதையை பிபிஸி நிறுவனம் இலங்கையில் படமாக்க முயற்சி எடுத்தபோது முஸ்லிம்கள் காட்டிய எதிர்ப்பினால் அன்று இந்த முயற்சி கைவிடப்பட்டது.

இன்று தீபா மேத்தாவினால் கொழும்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளிலேயே இது வெற்றிகரமாக படமாக்கப்பட்டு வருகிறது.

Winds of Change என்ற திரைப்படம் இந்திய சுதந்திர காலத்தில் ஏற்பட்ட பிரிவினையை மையமாக வைத்து சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்தியால் எழுதப்பட்ட கதையை கருப்பொருளாக கொண்டிருக்கிறது.

.ஹமாஸ் - பத்தாஹ் ஒப்பந்தம் மற்றுமொரு காட்டிக்கொடுப்பா?அல் பதாவினதும் ஹமாஸினதும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி கேள்விப்ட்டதுமே டெல் அவிவ் ஹோட்டலில் இஸ்லாமிக் டீ குடிப்பது போல் ஒரு ஏகாந்த உணர்வு மனதுமுழுதும்.

அட என்ன ஒப்பந்தம் அது என ஆய்வு செய்த போது தான் மீண்டும் இரத்தம் தோய்ந்த இஸ்லாமிய வரலாற்றின் எச்சங்கள் தான் இவர்கள் எனும் உண்மை மீண்டும் மண்டையில் விண் என்று உறைத்தது.

இந்த ஒப்பந்தம் ஒன்றும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் நடைபெறவில்லை. மாறாக மேற்குலகின் திட்டமிட்ட காய் நகர்த்தலின் விளைவேயது.

புரியவில்லையா?.. ஹாமாஸ். பாலஸ்தீனம் ஈன்றெடுத்த மாபெரும் மக்கள் இயக்கம். இயக்கம் வேறு மக்கள் வேறு எனும் இன்றைய உலகில் மக்கள் அரசியலின் நல்ல முன்னுதாரணம் ஹமாஸ். தியாகி அஹ்மட் யாஸீனின் துல்லியமான திட்டமிடலிலும் தியாகி டாக்டர் ரன்தீஸியின் தரமான வழிகாட்டலிலும் தியாகிகள் அய்யாஸ் முஹியுத்தீன் ஸரீப் போன்றோரது உந்துதலிலும் உருவான போராட்ட இயக்கம்.

காஸாவை கோட்டையாக மாற்றிய இவர்கள் இஸ்ரேலுடன் மோதிய போது தான் அமெரிக்க ஏகாதிபத்திய நாய்களிற்கும் இஸ்ரேலிய மிருகங்களிற்கும் ஒரு உண்மை புரிந்தது.

வெறுமனே இராணுவ அதி நவீன தொழில் நுட்பங்கள் வெறுமனே தாக்கியி்க்கும் அழித்தொழிப்பிற்கு மட்டுமே பயன்படும். நகர்புற சண்டைகளிற்கோ அல்லது கெரில்லா தாக்குதல்களிற்கோ அல்ல என்பது.

ஆம் ஹமாஸுடனான சண்டையின் போ சுமார் 35 இற்கும் மேற்பட்ட அதி நவீன அமெரிக்க தயாரிப்பான டாங்கிகள் தரைமட்டமாக்கப்பட்டது. (இஸ்ரேல் அதை தான் தயாரித்தாக கூறுவது அரபு நாடுகளை அச்சப்பட வைக்க). அப்பாச்சி ரக 3 ஹெலிகப்படர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனால் இவை ஊடகங்களால் அமெரிக்க நலன் கருதி மறைக்கப்பட்டது.
இவ்வளவு திறமைமிக்க இராணுவ அமைப்பைக் தன் வசம் கொண்டுள்ள் ஹமாஸ் மெல்ல மெல்ல ஹிஸ்புல்லாவுடன் இணங்கிப் போவது அமெரிக்காவிற்கு பெரிய இடி. சேய்ஹ் நஸ்ருல்லாவின் காஸா யுத்தத்திற்கு பின்பான பேச்சு எப்போது வெளியானதோ அப்போதே பென்டகன் இது பற்றி கவலைப்பட ஆரம்பித்து விட்டது. ”உங்கள் இரத்தம் எங்கள் இரத்தம். உங்கள் போராட்டம் எங்கள் போராட்டம்.பலஸ்தீனர்களிற்காக களமிறங்க ஹிஸ்புல்லாஹ் ஒரு போதும் தயங்காது. இன்சாஅல்லாஹ்”. இதுவே அவர் கும்மில் வைத்து ஆற்றிய உரை.ஹிஸ்புல்லா ஹமாஸை விடவும் தரம் வாய்ந்த போரியல் யுக்திகளையும் நவீன ஆயுதங்களையும் ஈரானிய ஜெனரல்களின் மறைமுக வழி நடத்தல்களையும் கொண்ட அமைப்பு.

இப்போது ஹிஸ்புல்லாவுடனான ஹமாஸின் கூட்டு இஸ்ரேலி்ற்கு மிகப் பாதகமான நிலைமைகளை உருவாக்கும். ஆக ஹமாஸை ஹிஸ்புல்லாவில் இருந்து தனிமைப்படுத்த ஒரே வழி அல்-பதாவுடன் (பீ.எல்.ஓ.) இணைப்பை ஏற்படுத்துவதாகும். இதுவே மேற்குலகின் நிலை.


ஹமாஸிற்கோ ஜீன்த் அல்லாஹ் எனும் ஸலபி கருத்தியல்களை கொண்ட முஸ்லிம் இராணுவ அமைப்பின் காஸா வருகை விரும்பத்தகாத ஒரு விடயம். காஸாவில் தாக்குதல் நடாத்தி அதன் தலைவர்களை கொன்ற போதும் ஜீன்த் அல்லாஹ் மேற்குக்கரையில் தளமெடுத்துள்ளமை ஹமாஸின் எதிர்கால இஸ்லாமிய இருப்பை கேள்விக்குறியாக்க வல்லது. இதனால் மேற்குக்கரையில் ஹமாஸின் மீள் ஸ்தாபிதம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது ஹமாஸிற்கு.மஹ்மூத் அப்பாஸின் பிரச்சனையோ வேறு. அல்-பதாவின் பலம் வாய்ந்த இராணுவ அணியினர் ஹமாஸ் உடன் உடன்பாட்டு போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என தொடராக வலியுறுத்திய வண்ணம் உள்ளனர். கூடவே மேற்குலகின் திடீர் நெருக்கடி ஹமாஸ் உடன் பேச்சுவார்த்தை செய்யுமாறு.

எகிப்திய அண்மைய இஸ்ரேல் விரோத மனோபாவம் ஹமாஸை பலப்படுத்துவதில் போய் அமைந்துவிடக் கூடாது என்பது இஸ்ரேலின் கவலை. அதற்கு ஒரே வழி எத்தன் யஸீர் அரபாத்தின் தோழன் மஹ்மூத் அப்பாஸைக் கொண்டு ஹமாஸை உள்வாங்குவதும் எகிப்துடன் அப்பாஸை முகம் கொடுத்து சமரசம் செய்ய வைப்பதும்.

மொத்தத்தில் மீண்டும் ஸியோனிஸ சதி வலையில் பலஸ்தீன். அழுவதே விதி என்றால் நாமும் சேர்ந்து அழுவோம் பாலஸ்தீன அப்பாவி மக்களிற்காக...
Related Posts Plugin for WordPress, Blogger...